Sunday, July 20, 2014

பின்தொடரும் வினாக்கள்

வணக்கத்திற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
பின் தொடரும் நிழலின் குரல்..நாவலை படித்து முடித்த உடன் ஏற்பட்ட உணர்ச்சி பிரவாகத்தில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
அச்சம், குற்றவுணர்வு, மயக்கம், தயக்கம், கோபம் என்னவென்று சொல்லத்தெரியவில்லை ஏதோவொரு உணர்ச்சியில் இரத்தநாளங்கள் ஜில்லிடுகின்றன. ஒருவனின் நிழல் தொடர்ந்து சென்ற என் நிழல் சுயத்தை இழந்த பிரக்ஞையாக சுத்த வெளியில் தள்ளாடுகிறது.
வரலாற்றின் அகோரமான மறுபக்கங்களை புரட்டி பார்த்திடும் பொழுது ஏமாற்றமும், வஞ்சகமுமே எஞ்சிடுமோ?. வீண் கௌரவத்தில் மார்தட்டிய பெரும் நெஞ்சினன் காலடியில் புதையுண்ட உயிர்கள்தான் எத்தனையெத்தனையோ!. புரட்சியில் எதிரிகள் நால்வர் மாண்டிட, தம்படையினர் நானூறுபேரை பலியிடுவதுதான் இவனது தந்திரமோ?.
வீரபத்ரபிள்ளையின் கடிதங்களும், கதைகளும் இரஷ்ய குளிரில் உறைந்த இரத்த வாடையை இங்கேயும் வீச செய்தது. “பனிகாற்றில்” இறுகி போன இதயம், “விசாரனைக்குமுன்” ஓலமிட தொடங்கிற்று. உறைபனியை கடந்த பொழுது கதறிக்கதறி அழதொடகிற்று. கண்ணீர் வற்றிப்பின்பும் அதன் கதகதப்பு விழியின் ஓரத்தில் இன்னமும் உணர முடிகிறது. மறைக்கப்பட்ட புனிதவதியின் சந்திப்பில் அவள் கேட்ட கேள்வியில் உடைந்து சுக்கு நூறானது எனது நம்பிக்கைகள், குற்றவுணர்வின் உச்சகட்ட பழியும் இதுதானோ?.
இவர்கள் யார் என்றே தெரியாது, இதன் உண்மை தன்மை எவ்வளவுதூரம் என்றும் அறியேன். இருந்தும் கதறுகிறேன் இவர்களுக்காக. ஒருவன் தன் எழுத்தில் அவன் கொண்ட உணர்சிகளை அடுத்தவர்களுக்கு தொற்றுவியதியென பரவ செய்துவிடுகிறான்.
இவர்களது நிழலை தொடர குறைந்தபட்ச இரஷ்ய புரட்சி அறிவு அவசியமாகிறது.
“புனிதர்களும் மனிதர்களும்” படிக்கையில் தால்ஸ்தேயும், தாஸ்வேஸ்கியை பற்றிய என் அறியாமை என்னை சுடுகிறது.
பக்கங்களை வேகமாக நீந்தி வந்த எனக்கு புகாரின் நிழலை மட்டும் கடந்திட முடியாமல் தத்தளித்தேன். அதுவரை என் பிரக்ஞை வேறு நாவல் வேறு என்றிருந்தேன், நீரின் ஓட்டத்தோடு துளியோடு துளியாய் கலந்த நொடியில் எளிமையாயிற்று. என் சுயம் மறந்து சுற்றம்யாவும் மறந்த பின், என்ன சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை கூட அறியா மடந்தையாய் போனேன் சில மணி நேரங்களுக்கு.
பைத்தியங்களின் நாடகமே என்ன மீட்டெடுத்தது என்றால் உண்மையே. இல்லையேல் நானும் அருணாச்சலத்தின் நிழலின் தொடர்ச்சியாய் மன பிறழ்வுற்றிருப்பேன்.
அறிவைகசக்கி விடைகான முடியாத கேள்விகளுக்கு விட்டேந்தியாய் நாகம்மை உரைத்த பதில்கள் நெற்றிப்பொட்டில் அறைந்தது போல் இருந்தது.
வரலாறு, புரட்சி என்கிற பெயரில் உயிர்பலிகள் சரளமாக அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. பெயர்கள் மட்டும்தான் வேறுவேறு ஆனால் அதனை மறந்து போவதில் ஒற்றுமை இன்றும் நீடித்துக்கொண்டே வருகிறது.
காந்தியை குறைகூறுபவனும் உண்டு, கட்டப்பொம்மனை காறி உமிழ்ந்தவனையும் கண்டிருக்கிறேன். நேதாஜியே எல்லாம் என்று திரிந்தவனுடனும் பழகியிருக்கிறேன். இவையே உலகம், இவர்களே அதன் அங்கம். சாட்சியாய் இருந்து புரள்கிறவனே தன்னிலையற்று மறித்து போகிறான். அவன் அடையாளங்கள் எஞ்சியதுமில்லை. ஆராய்ச்சியாலனே அவனை இனம் கண்டுகொள்கிறான். அவனது படிமங்களே அதற்கு சாட்சி கூறக்கூடும். அதில்மட்டுமே அவன் முழுமையும் அடைகிறான்.
இந்நாவல் என்ன ஏதோ செய்துவிட்டது. இது அறத்தப்பற்றிய ஞானமா அல்லது அறிவின் பிறழ்ச்சியா ஏதோ ஒன்று முன்பிருந்த நான் நானாக இல்லை இப்பொழுது.
பள்ளிபருவத்திலிருந்தே இந்த கேள்வி விடைகாணாது தத்தளிக்கிறது. முப்பது கோடிபேரை மிகச்சிறிய கூட்டம் ஆண்டது, மக்களிடையே ஒற்றுமை வேண்டி தனிதனி குழுக்களும் அமைந்தன. இருந்தாலும் ஆண்டவனுக்கு படைவீரனாய், பாதுகாப்பு காவலனாய், எடுபிடி சிப்பந்தியாய் என எல்லாவகையிலும் அவர்களுக்கு உதவவே ஒரு கூட்டம் வாழ்ந்தே வந்தது. இவர்களை மட்டும் வரலாறு எப்படி எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது?. ஜாலியன் வாலாபாக்கில் சுட சொன்னது என்னமோ டயர்தான் சுட்டுவீழ்த்தியது யார்?. இவர்களுக்கு தெரியவில்லையா நாம் யாரை சுடுகிறோம் என்று? எல்லாவரலாற்றிலும் இப்படி ஒருகூட்டம் இருக்கத்தான் செய்கிறது, இவர்களது எண்ணிக்கையே பெரும்பான்மை இவர்கள் யார்பக்கம் என்பதில் தான் புரட்சியின் வெற்றி தோல்விகள் ஒளிந்துள்ளது. இவர்களை மட்டும் ஏன் யாரும் குறைகூறுவதே இல்லை.?
நன்றி
இப்படிக்கு உங்களின் மற்றுமொரு வாசகன்
ஹரிஹரன் க.
அன்புள்ள ஹரிஹரன்,
நம் சிந்தனையைத் தூண்டவேண்டியவை இரண்டு புள்ளிகள். ஒன்று அறம் என்ற கருதுகோள். இன்னொன்று வரலாறு என்ற கருதுகோள். நம் அறவுணர்ச்சியை வரலாற்றைக்கொண்டு பரிசீலிப்பதுதான் சிந்தனை என்பது. இங்கு நம்மில் பெரும்பாலானவர்கள் அறம், வரலாறு இரண்டையுமே பொத்தாம்பொதுவான நம்பிக்கையாக அல்லது விசுவாசமாக மட்டுமே கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் நம் சிந்தனைகள் இவ்வளவு மழுங்கியிருக்கின்றன. பின் தொடரும் நிழலின் குரல் அவ்விருமுனைகளையுமே உடைத்துத் திறந்துவிட முயலும் ஒரு ஆக்கம்.
நீங்கள் கேட்ட கடைசிவினா முக்கியமானது. அது ‘ஜனநாயக’ த்தின் மாயம். அது ‘மக்களை’ அனைத்து பாவங்களில் இருந்தும் பொதுமன்னிப்பளித்து விடுவித்துவிடுகிறது.
ஜெ

No comments:

Post a Comment