Sunday, July 20, 2014

வரலாற்றின் மனசாட்சியைத் தீண்டும் குரல் -க மோகனரங்கன்

ஓர் இலக்கியப்படைப்பு மகத்தானது என்று கருதப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை ?வேறு ஒருதேசத்தில் ,வேறு ஒரு சூழலில் ,வேறு ஒரு மொழியில் நிகழும் படைப்பு எவ்விதத்தில் அந்நியோன்னியமான ஒன்றாக நமக்குள் இடம் பெயர்கிறது, உறவுகொள்கிறது ? நாம் நேரில் கணும் மனிதர்களைக்காட்டிலும் படைப்பாளியின் கற்பனையில் உருக்கொள்கிற கதாபாத்திரங்கள் ஏன் நம்மை பாதிக்கிறார்கள் ? யதார்த்த வாழ்க்கையில் நாம் வெகு சுலபமாக உதாசீனம் செய்துவிட்டு போகும் விஷயங்கள் ,மதிப்பீடுகள் ஒரு படைப்பில் வெளிப்படுகையில் ஏன் மனம் நெகிழ்ந்து போகிறோம் ?ஏன் குற்ற உணர்வில் தவிக்கிறோம் ?
இவற்றுக்கெல்லாம் திட்டவட்டமான பதிகள் ஏதுமில்லை. ஒரு பெரும் படைப்பு என்பது அதைப்படிப்பவனின் எண்ணங்களின் வழியாக புலன்களுக்கு எட்டாத நுண்ணிய இடைவெளிகளை மெளனமாக ஊடுருவுகிறது. அவனது பார்வையை கனவுகளை சிந்தனையை மதிப்பீடுகளை அவனை அறியாமலேயே குலைக்கிறது , தலைகீழக்குகிறது , வரிசைமாற்றுகிறது.மண்ணின் புழுதியில் கால்களை அளைந்துகொண்டிருப்பவனை மனம் கூசச்செய்து விண்ணின் எல்லையின்மையை நோக்கி சிலகணமேனும் மேலெழும்பிப் பறக்கத் தூண்டுகிறது .இயற்கையின் படைப்பில் இப்பேரண்டத்தில் தானும் ஒரு மகிமை மிக்க துளி என்ற பேருணர்வால் இதயம் விம்மும்படிச் செய்கிறது . இவ்வகைபடைப்புகள்தமிழில் அரிதாகவே படிக்கக் கிடைக்கின்றன. அவ்வகை நாவல் ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல்
தனது முந்தைய நாவலில் காலத்தை ஊடுருவி நகரும் கற்பனையின் அறிதல் வழியாக தன் புனைவின் சாத்தியங்களை பரிசீலனை செய்த ஜெயமோகன் இந்த நாவலில் துல்லியமான விவரங்களுடன் கூடிய சமீபத்திய வரலாற்றின் ஒருபகுதியை பின்புலமாக் கொண்டு மனித இருத்தல் பற்றிய அடிப்படையான விசாரணைகளை மேற்கொள்கிறார் .
வரலாறு நெடுகிலும் மனிதன் கண்டவற்றுள் ஆகச்சிறந்தது என்று மதிப்பிடப்பட்ட கம்யூனிச சித்தாந்தம் அது முதலில் நிறுவப்பட்ட சோவியத் ரஷ்யாவிலேயே நொறுங்கிப்போனது இநூற்றாண்டின் பெரும் துக்கம். இலட்சியவாதம் என்ற நிலையில் அதுமனிதனின் பூரணத்துவத்தை முன்வைத்துப்பேசினாலும் நிறுவனமயமாகையில் அது இழைத்த குரூரங்கள் மறையாத கறையாக வே சரித்திரத்தில் படிந்துள்ளது .
எந்த வரையறுக்கப்பட்ட அமைப்பிற்குள்ளும் விசுவாசம் என்ற பேரால் மனசாட்சியை கைவிடசெய்யும் விஷயம்தான் வலியுறுத்தப்படவும் , கடைப்பிடிக்கப்படவும் செய்யப்பட்டுவருகிறது . நுட்பமான மேதைகள் பலரும்கூட சொந்த மனசாட்சியைவிடவும் தாம்சார்ந்துள்ள அமைப்பை முக்கியமாக கருதவும் நம்பவும் முற்படுவது அது தரும் அடையாளம் மற்றும் பாதுகாப்பு போன்ற லெளகீகமான லாபங்களுக்காக மட்டுமே என்று குறைத்துச் சொல்லிவிடமுடியாது .
மாறாக உலகத்தின் அல்லது வரலாற்றின் இயக்கத்தை தங்கள் மூளையால் அளந்து அவற்றின் சிக்கல்களுக்கு தம்மால் தீர்வுகாணவும் மாற்றிவிடவும் முடியும் என்ற அவர்களின் குருட்டு நம்பிக்கைதான் . அதை நம்பிக்கை என்றுகூட சொல்லிவிடமுடியாது தான். எல்லா தனிமனித பாவங்களை விடவும் இத்தகைய இலட்சிய வெறிபிடித்த அகம்பாவங்களால் விளைந்த பெருநாசங்கள்தான் மனித குல வரலாறாக நீண்டுகிடக்கிறது .
உலகமுழுவதிலும் மனிதாபிமானிகளால் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட அக்டோபர் புரட்சியின் இலட்சியவாத அம்சங்கள் லெனின் மறைவோடு முடிந்துபோயின.ஸ்டாலின் காலத்தில் பிரம்மாண்டமான ஒரு வல்லரசாக ரஷ்யா கட்டமைக்கப்பட்டபோது அதன் பலியாடுகளாக பல்லாயிரக்கணக்கன அப்பாவிமக்கள் காவுகொள்ளப்பட்டனர் . அதை மனசாட்சியின் பேரால் எதிர்க்கமுற்பட்ட கலைஞர்கள் எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலருக்கும் பரிசாக உடனடிமரணம் அல்லது சாகும்வரையில் சைபீரியப் பனிவெளியும் விதிக்கப்பட்டது .அதில் புரட்சியை முன்னின்று நடத்திய முதல்கட்ட தலைவர்கள் பெரும்பாலோர் அடக்கம்.
அவ்வாறு துரோகி எனமுத்திரையிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட புகாரின் என்ற செம்படை முன்னணிதலைவரின் கதை பெரிஸ்த்ரோய்க்காவின்போது அவரது மனைவி அன்னா நிக்கலாயெவ்னா என்பவரால் வெளிக்கொணரப்பட்டது .அம்மாதிரி வெளியே தெரியாமலே இருட்டில் புதைந்துபோன அவலங்கள் எத்தனியோ இல்ட்சம். அதுவரையிலும் எல்லாமே ஏகாதிபத்திய கட்டுக்கதை என்று ஓங்கிச் சொல்லிவந்த கம்யூனிஸ்டுகள் தங்களைப்பற்றி சுயபரிசீலனைசெய்துகொள்ளவேண்டிய தார்மீக நெருக்கடிக்கு உள்ளனார்கள்.
புகாரினைமுன்வைத்து ரஷ்யாவிலிருந்து தொடங்கி இந்தியக் கயூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கம் வரையில் நிகழும் சித்தாந்தத் தேவையையும் , சந்தர்ப்பவாத அரசியலையும் ,இலட்சியக்கனவுகளின் காலம்போய் பேச்சுவார்த்தை என்ற பேரம் நடக்கும் அதிகார மையங்களையும் விவரித்துச் சொல்லும் இந்நாவல் மற்ற அரசியல் நாவல்களைவிட அந்த ஒற்றைப் பரிமாணத்துக்குள் நின்றுவிடவில்லை . அரசியலை ஒரு முகாந்திரமாகக் கொண்டு அசாதாரணமான ஓர் உத்வேகத்தோடு மனிதனின் அடிப்படை உரிமையான உயிர்வாழ்தலைக் கூட நிச்சயமற்றதாக்கும் நிறுவன அதிகாரம் பற்றியும் ஒரு சமூகத்தில் எந்தவிதமான அடக்குமுறைச்சூழலிலும் நிர்பந்தத்திலும் மெளனிக்கமறுக்கும் மனசாட்சியின் குரல் நீதியுணர்வு முதலியவற்றை பற்றியும் தீவிரமான வாதப்பிரதிவாதங்களை முன்வைக்கிறது .
இந்நாவலின் பலபகுதிகள் பிரக்ஞைபூர்வமான கச்சிதத்தைதாண்டி , கட்டற்ற ஆவேசத்தை ,பதற்றத்தை, தன்னிச்சையான உணர்ச்சி வேகத்தைக் கொண்டதாக பலவித நடைகளில் அமைந்துள்ளன. பிராந்தியப் பேச்சு மொழியிலிருந்து கவித்துவமிக்க செம்மொழிவரையிலும் பலவிதமான சாயல்களில் , புழங்குதளத்துக்கு ஏற்ப மொழி இயல்பாகப் பயின்றுவருகிறது . கனவுநிலைக்காட்சிகளாக வரும் பகுதிகளான புகாரின் அன்னா பிரிவு [பனிக்காற்று நாடகம் ]சைபீரிய வதைமுகாம் சித்திரங்கள் [மூடுபனி நாடகம் ] தல்ஸ்தோயும் தஸ்தவேவ்ஸ்கியும் சந்திக்கும் ரயில்நிலையக் காட்சிகள் [மனிதர்களும் புனிதர்களும் நாடகம் ] புகாரினுக்கும் பாதிரியாருக்கும் குளியலறையில் நடைபெறும் உரையாடல் [விசாரணைக்கு முன் சிறுகதை ]கிறிஸ்து புகாரினுக்கு காட்சிதரும் பகுதி [ உயிர்த்தெழுதல் ] முதலிய பகுதிகள் உரைநடைக்கும் கவிதைக்கும் இடையேயான இடைவெளியை பெரிதும் குறைத்துவிடுகின்றன.
இந்நாவலை வாசிக்கும்போது வாசிப்பின் போக்கிலேயே ஒரு உபபோதமாக இந்நாவல் இயங்கும் நிலப்பரப்பும் அதன் தட்ப வெப்பமும் புலன் வழி உணர்தலுக்கு இணையாக மூளைக்கு அனுபவமாகிறது. ஜெயமோகனின் பிற படைப்புகளில் இத்தனை அழுத்தமாக பதிவுபெறாத விஷயமாக இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மிகுந்த உயிர்ப்புடன் உள்ளனர் .நாகம்மையாகட்டும் , அன்னாவாகட்டும் , இசக்கியாகட்டும் மூவருமே அவர்கள் சார்ந்திருக்கும் ஆண்களின் ஆளுமையிலிருந்து விடுபட்டு தங்கள் சொந்த மனத்திடத்துட பிரச்சினைகளை தங்களுக்கே உரிய வழியில் எதிர் கொள்கிறார்கள் .அதன்மூலம் தங்கள் ஆண்களின் வாழ்க்கைக்கு ஒரு முழுமையையும் அர்த்தத்தையும் வழங்குகிறார்கள்.
அருணாச்சலத்தின் தந்திரமும் மனநெகிழ்வும் பேதலிப்பும் நிரம்பிய தேடல்களை விடவும் நாகம்மையின் தடுமாற்றங்கள் இல்லாத எளிமையும் மனசாட்சியின் தெளிவுமே கம்பீரம் மிக்கவையாகத் தோன்றுகின்றன.அவளால்ஒரே சமயத்தில் இருவேறு துருவங்களாகக் கருதப்படும் அருணாச்சலத்தையும் கெ .கெ . எம் மையும் தன் அன்புக்குக் கட்டுப்பட்டவர்களாக உணரச்செய்ய முடிகிறது . அதேபோல மனசாட்சியின் உறுத்தல் காரணமாக தான் சாகசத்துடன் விளையாடிவந்த அரசியல் சதுரங்கத்தில் அதிகார ஏணிப்படியிலிருந்து மரணத்தின் பாதாளத்துக்கு தள்ளப்படுகிற புகாரினைக்காட்டிலும் நம்பிக்கையின் பசுமைத்துளிகூட துளிர்க்காத சைபீரியப்பனிவெளியில் தனக்கான நாள்வரையில் காத்திருந்த அன்னாவின் பொறுமையே மதிப்பிற்குரியதாக படுகிறது.
ஆனால் சரித்திரத்தில் அருணாச்சலமும் புகாரினும் மீறினால் வீரபத்ரபிள்ளயுமே இடம் பெறுவார்கள் , நாகம்மையும் அன்னாவும் இசக்கியுமல்ல .
நாவலின் மற்றொரு முக்கியமானபகுதி மனநோய்விடுதியில் நடைபெறும் நாடகம். எழுதியவர் முதற்கொண்டு நடிப்பவர் வரையிலும் அனைவருமே மனநிலை பிறழ்வுற்றவர் என்பதால் நாடகத்தின் முதல் அங்கம் முதற்கொண்டே அபத்தமும் அதையொட்டிய கட்டுப்படுத்த முடியாத சிரிப்பும் துவங்கிவிடுகிறது .தமிழ் புனைகதையில் இப்பகுதிக்கு இணையான நகைச்சுவைக்காட்சிகள் குறைவே .நடுவில் திடாரென யோசிக்கும்போது அந்தச் சிரிப்பிற்கடியில் ஒரு கடுமையான துக்கம் இருப்பதை உணர முடிகிறது .அது இப்பூமியின் மீது ஆதியும் அந்தமும் இல்லாது கிடக்கும்காலத்தின் நகைப்பாகும்.
மகத்தான இலட்சியங்களை ,தலைமுறையின் கதாநாயகர்களை, அவர்களின் பெரும் கனவுகளை என எல்லாவற்றையும் சிதைத்துவிட்டு சிரிக்கும் சிரிப்பு அது . நுண்ணுணர்வு கொண்ட எவரும் அந்த கொடும்சிரிப்பின்முன் மனம் பதைத்து மண்டியிடத்தான் வேண்டும். இந்நாடகத்தில் சாக்ரட்டாஸ் , கிறிஸ்துவில் இருந்து மார்க்ஸ் ,இ எம் எஸ் வரை எவருமே அந்தக் குரூர நகைச்சுவைக்கு தப்புவதில்லை. ஓர் அதீதக் கணாத்தில் அந்நாடக நிகழ்வுகள் யதார்த்தமாகவும் அதற்கு வெளியே நடைபெறும் நிகழ்வுகள் பைத்தியக்காரத்தனமாகவும் உருமாறிவிடும் அபாயம் எப்போதும் இருக்கிறது.
தன் சக்திக்கு அப்பாற்பட்ட குருட்டுவிதிகளுக்கு அடிபணிய மறுத்து மெளனமான வன்மத்துட ன் குடிக்கத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அழித்துக் கொள்கிற வீரபத்ரபிள்ளையின் சித்திரம் நாவலில் மிக நுணுக்கமாகவும் இயல்பாகவும் துலக்கம் கொள்கிறது . தமிழ் கதைமாந்தரில் இத்தனை ஆழமான மன உந்துதல்களும் நிலைதடுமாற்றத்தின் தவிப்புகளும் கூடிய வேறொரு குடிகாரனை நாம் காணமுடியாது .அவனது முடிவு லெளகீக மதிப்பீடுகளின்படி முழுத்தோல்வியாகவும் யதார்த்தத்துக்கு சற்றும் பொருந்திவராத அபத்தமாக காணப்பட்டாலும் தார்மீக அடிப்படையில் அவன் தன் குடும்பம் ,சார்ந்திருந்த இயக்கம் ,சமூகம் என எல்லாருடைய மனசாட்சியையும் உறுத்தும் நிரந்தரமானதொருகுற்ற உணர்வாக நிலைத்துவிடுகின்றான்.
நாவலுக்குள் சொந்த மற்றும் எளிதில் ஊகிக்க முடிகிற கற்பனையான பெயர்களுடன் வருகிற சில நிஜமனிதர்களின் பாத்திரங்கள் புனைவுக்கும் நிஜத்துக்குமான அருவமான உறவை காட்டுவதோடல்லாமல் நாவலின் நம்பகத்தன்மையை துல்லியமாக்கிக் காட்டவும் உதவுகின்றன
இத்தனை தேய்வுக்கு பிறகும் நமது அரசியல்க் களத்தில் இன்னமும் பொருட்படுத்தக்கூடிய அளவுக்கு தத்துவ சித்தாந்தப் பயிற்சியும் , சுயக்கட்டுப்பாடுகளும் , தனிமனித ஒழுக்கங்களும் பேணப்ப்பட்டு வருவது கம்யூனிஸ்டு கட்சிகளில் மட்டும்தான் . ஆனால் நீதியுண்ர்வும் அறவுணர்வுமற்ற அதன் சித்தாந்தக் குருட்டுத்தனம் , ஆன்மீக பரிமாணங்களற்றவனாக மனிதனைக் குறைத்து மதிப்பிடும் அதன் அபத்தம் ஆகியவை அத்தத்துவத்தின் எல்லைகளை வெகுவாகக் குறுக்கி விடுகின்றன . இச்சுழலில்தான் இங்கு கீழைமார்க்ஸியம் விவாதிக்கப்படுகிறது.
ஆகவேதான் இந்நாவல் வரலாற்றைவிடவும் முக்கியமானது என முன்வைக்கும் அறம்சார்ந்த கேள்விகள் முக்கியத்துவமுடையதாகின்றன. இக்கேள்விகள் ஒருதலைப்பட்சமானவை என கட்சி சார்ந்த மார்க்ஸியர்கள் மறுக்கலாம். அப்படிமறுப்பதற்காக அவர்கள் முன்வைக்கும் வாதங்களைப் பொறுத்து நாவலுக்கு வெளியேயும் விவாதம் தொடரப்படலாம். அதற்கான சாத்தியங்களுக்கு உரியதாகவே நாவலின் வடிவம் உருவாகிவந்துள்ளது.
சிறுகதைகள், நாடகம் ,கவிதைகள், கடிதங்கள், நினைவுக்குறிப்புகள், என மொழியின் எல்லா வடிவங்களையும் நாவலுக்குள் கொண்டுவரும்போது அது கட்டமைப்பு பற்றிய ஓர் உத்தியாக மட்டும் சுருங்கிவிடாமல் பல்வேறு மாற்றுத்தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குரல்களாகவும் அவற்றுக்கு இடையேயான உரையாடல்களாகவும் விரிவாகப்பதிவு பெறுவது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக ஒன்றை குறிப்பிட்டு சொல்லவேண்டும் . புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் அச்சாக்கத்தின் தரம் குறித்தது அது .பதிப்பாளர் புத்தகம் வெளியிடுவதை வெறும் வியாபாரமாகமட்டும் கருதாத பட்சத்தில் புத்தகத்தின் வெற்றியில் அதன் வெளியீட்டாளருக்கும் பங்கு உண்டு. அவ்வகையில் தமிழின் பதிப்பகத்தார் இந்நாவலுக்கு அதிகபட்ச கெளரவத்தை சேர்த்துள்ளனர் என்று கூறவேண்டும் .
[பின் தொடரும் நிழலின் குரல் , தமிழினி பதிப்பகம்,342 .டிடிகெ சாலை ,சென்னை,600014 .
பக்கங்கள் 723 விலை ரூ 290
'வேட்கை ' காலாண்டிதழ் மேய் 2000 இதழில் வெளிவந்தது ]

 

No comments:

Post a Comment