Sunday, July 20, 2014

ராஜினியின் விமர்சனம் பற்றி -கறுப்பி

கம்யூனிஸ்ட் கட்சிகளின் முறைமையாலும், சோசலிசத்தின் விரோதப் போக்கினாலும் சோசலிசத்தின் தலமையாயிருந்த ருஷ்யா உடைந்த போது உலகம் முதலாளித்துவத்தின் கைகளுக்குள் விழுந்து விட்டது என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்கவேண்டியுள்ளது. ஆங்காங்கே மாக்ஸைப் படித்து விட்டு வாழ, கொள்கை

பரப்ப முற்படுதலும் மிகக் குறைந்த அளவில் இடம்பெறவே செய்கின்றன. இந்நேரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையைக் கேள்விக்குறியாக்கி வெளிவந்தது ஜெயமோகனின் “பின் தொடரும் நிழலின் குரல்”. இந்நாவலுக்கான பல ஆண் விமர்சகர்களின் பார்வையிலிருந்து பெரிதும் வேறுபட்டு பெண்ணியப் பார்வையாக ராஜினியின் விமர்சனம் வந்திருக்கின்றது.
ராஜினின் விமர்சனத்தோடு எனக்கு இருக்கும் சில முரண்பாடுகளை இங்கே வைக்கின்றேன்.
எமது ஒட்டு மொத்த சமுதாயத்தின் வாழ்க்கை முறையிலிருந்துதான் எப்போதுமே இலக்கியங்கள் உருவெடுக்கின்றன. இந்திய கலாச்சார விழுமியத்தில் எத்தனை சதவீதமான பெண்கள் முற்போக்குத் தன்மை பெண்ணியம் பேசுபவர்கள் என்று கணக்கிலிட்டால் விரல் விட்டு எண்ணி விட முடியும். எல்லோராலும் ஒரு “கமலாதாஸ்” ஆகவோ “அம்பை” யாகவோ வாழ்வைப் பார்க்க முடியாது. எத்தனை ஆண்கள் சமத்துவக் கண்ணோட்டத்தோடு பெண்களை நோக்குகின்றார்கள். (பெண்களைச் சமத்துவக் கண்ணோடு பார்க்கும் ஆண்கள் என்று பெயர் சொல்ல ஒருவரையும் தெரியவில்லை) முன்பு ஒருமுறை அம்பையின் “காட்டில் ஒருமான்” சிறுகதைத் தொகுதியை விமர்சித்த ஒரு விமர்சகர் (பெயர் நினைவிலில்லை) அம்பையின் சிறுகதைகளில் வரும் நாய் கூட இன்ரலக்சுவல் ஆக சித்தரிக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார். அம்பையின் அண்மைக் காலப்படைப்புக்களில் சில அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுத்தான் இருக்கின்றன. இது படைப்பாளி தன் பார்வையிலிருந்து சமூத்தை நோக்குவதால் ஏற்படும் பிறழ்வு என்பது என் கருத்து.

இதே பார்வையைத்தான் ராஜினியும் பின்தொடரும் நிழலின் குரலில் பார்த்திருக்கின்றார் என்று நான் நம்புகின்றேன். குடும்பம் அதன் கட்டமைப்பு என்பதற்குள் தம்மை முற்றாகப் புகுத்தி வாழும் ஒரு கலாச்சாரத்தில் இருந்து வரும் ஒரு முதியவருக்கு இறக்கும் தருவாயில் தனது வைப்பாட்டியை நாடிச் செல்லதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? முற்போக்குவாதி, பெண்ணியம் தெரிந்தவர் என்று விட்டு ரோட்டில் நாறிப் போக யாருக்குத்தான் மனம் வரப் போகின்றது. மனித சுயநலத்தைத்தான் படைப்பாளி காட்டியுள்ளார்.
அடுத்து ஒரு சாதாரண நடுத்தர வகுப்பில் பிறந்து எட்டு மணித்தியாலங்கள் அலுவலகவேலையில் இருக்கும் ஒரு ஆணுக்கு மனைவியானவள் வெறும் இந்தியப் பின்னணியை உடைய ஒரு மனைவியாகத்தான் இருக்க முடியும். (இன்றும் கனடாவில் கூட இப்படித்தானே பெண்கள் வாழ்கின்றார்கள். எத்தனை பேர் முற்போக்காகவும் சமத்துவத்திற்காகக் குரல் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்?) அவளின் வாழ்வு கணவனையும் குழந்தைகளையும் அவர்கள் எதிர்காலத்தையும் சுற்றித்தான் இருக்க முடியும். அருணாச்சலத்திற்கு அம்பையோ கமலதாஸோ மனைவியாகச் சித்திரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ராஜினியின் அவா எனக்குப் புரியவில்லை. இனி யூமா வாசுகியின் “ரத்தஉறவில்” வரும் மனைவி ஏன் வீட்டை விட்டுப் போகவில்லை என்றோ கணவனை அடித்துக் கொல்லவில்லை என்றோ கேள்வி எழுப்பாமல் இருந்தால் சரி.
பாலியல் பற்றிய அவர் பார்வையைப் பார்க்கையில்
பெண்ணின் வட்ட யோனிதான் ஆண்களுக்கு உந்து சக்தியாகவும், மாயைப் பொருளாகவும், ஆதரிப்பதாகவும் இருப்பது என்பதுதான் சாத்தியம். பெண்ணியவாதிகளுக்கு இது உவப்பாக இருக்காவிடினும் இதுதான் யதார்த்தம்.

சினிமா நடிகைகளில் இருந்து பெண்ணியவாதிகள்வரை நிலை இதுவாகத்தான் இருக்கின்றது.
காதலி, மனைவி, சினேகிதி என்று வெவ்வேறு பெயர்களில் தமது குறியைத் தாங்கும் யோனியை உடைய பெண்களுக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுப்பது என்பதுதான் நடைமுறையில் இருக்கின்றது. இதை நான் அன்றாடம் கண்டு வருகின்றேன். ஆண்களை எதிர்பவர்களின் நிலை எப்படியானது என்பது எதிர்காத வரையில் பெண்கள் உணர்ந்திருக்க வாய்பில்லை. அதுவும் வெளி உலகிற்கு வந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆவலோடு செயற்படும் பெண்களைத் தமது கால்களுக்குள் போட்டு நசித்து விடும் இந்த உலகம். தமக்கான யோனியை வைத்திருப்பவர்களை தகுதி இருக்கோ இல்லையோ உயர்த்தி விடத்துடிக்கும். தனித்து நிற்று போராடமுடியாமல் இந்த ஆணாதிக்க உலகில் தம்மை இழந்து விடும் பெண்கள்தான் ஏராளம். “முற்போக்கும், அறிவும், இன்ரலக்சுவல்சும் யாருக்கு வேண்டும். யோனி ஒன்றே போதும் என்பதுதான் இங்கே வாசகம். இதுதான் யதார்த்தம். நன்றாக எழுதுகின்றீர்கள், பேசுகின்றீர்கள், உங்களிடம் நல்ல திறமையிருக்கு சொல்வார்கள் பக்கதில் மனைவியோ காதலியோ சினேகிதியோ வந்து கண் ஜாடை காட்டினால் போதும் எல்லாமே அம்பேல்.
அருணாச்சலம் தனது உயர்வை முற்று முழுதாக மனைவி எனும் அடைப்புக் குறிக்குள் அடங்கி விட்ட தனது மனைவியிடம் கண்டான். (ஒரு வேளை வைப்பாட்டி ஒன்றை உருவாக்கி அவளிடம் அதனைக் கண்டான் என்று எழுதியிருக்க வேண்டுமோ என்னவோ)
பின்தொடரும் நிழலின் குரல் கலாச்சாரத்தைக் கேள்வியாக்கும் படைப்பு அல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் போக்குகளை கேள்வியாக்கும் படைப்பே. அந்த வகையில் அது தனது தரத்தை இழக்கவில்லை என்பது என் கருத்து.
பெண்கள், கேட்கலாம், வாதாடலாம், எழுதலாம் ஏன் பெண்களைப் பெண்மையாகப் பார்க்கின்றீர்கள் என்று? ஆனால் பார்வை மாறவா போகின்றது? படைப்புக்களில் பாத்திரங்கள் எல்லாம் “இன்ரலக்சுவல்ஸ்” ஆக இருந்தால்? ம் கற்பனைக்கு நன்றாகத்தான் இருக்கிறது.
நன்றி

No comments:

Post a Comment