ண்ட நாட்களாக எதுவும் எழுதாமல் இருந்தபின், எண்ணங்களைக் கோர்வையாக்கி எழுத விழைகிறேன்.
இந்தக்`குழுமத்தில் சேர்ந்த பிறகு உங்கள் படைப்புகளைத் திரும்பவும் ஒரு புதிய கோணத்தில் படிக்க எண்ணி ,இரண்டாம் முறையாகப் “பின் தொடரும் நிழலின் குரல்” படிக்க ஆரம்பித்தபொழுது இவ்வாறு ஒரு அனுபவத்திற்குள்ளாவேனென்று நினைக்கவேயில்லை. அதன் தாக்கம் என்னைப் பல திசைகளுக்கு இழுத்துச்சென்றது.
அருணாச்சலம், கெ.கெ.எம், வீரபத்ரபிள்ளை, புகாரின், அன்னா, குழந்தை, ஜெயமோகன், டால்ஸ்டாய்….. அனைவருமே என்னோடு கூடவே இருப்பதுபோல் ஒரு உணர்வு என்னால் தவிர்க்க முடியவில்லை. ஒரு காகிதத்தில் கருப்பு அச்சுகளாய்த் தோன்றும் எழுத்துக்கள் உயிர்பெற்றுத் தாண்டவமாடி அழியாச்சுவடு விட்டுச்சென்றன.
அருணாச்சலம், வீரபத்ரபிள்ளையைக் குறித்துத் தேடும்பொழுது நான் இணையத்தில் புகாரினைத் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன பொறியாய்த் தொடங்கியது அதனுள்ளே மூழ்கும் அபாயம் வரை சென்றபொழுது ஓரளவு என் நிஜம் புரிய கட்டுப்படுத்திவிட்டேன். உங்களைத் தொடர்பு கொண்டு அருணாச்சலம், வீரபத்ரபிள்ளை, கெ.கெ.எம் என்று நிஜமான மனிதர்கள் இருந்தால் அவர்களை சந்தித்க்க முடியுமா என்றும் கேட்கலாமென இருந்தேன்.
புகாரின். ருஷ்ய புரட்சி, மார்க்சீய சித்தாந்தங்கள், அறம், டால்ஸ்டாய், அன்னா கரினினா…. இவை எல்லாமே ஒரு வட்டத்திற்குள் அடங்கமுடியாதவை. இவை மானுடத்தின் சாட்சிகள். வலிகள் மட்டுமே உன்மையனெ உணர்த்தும் குறிப்புகள்.
இவைகளின் நீட்சியாகப் பல வினாக்கள்:
• மானுட வாழ்வு ஏன் இத்தனை உட்சிக்கல்கள் மிகுந்ததாயிற்று? இவையனைத்தும் நம்மால் உருவாக்கப்பட்டவையே என்றால் அதை விடுவிக்கவும் முடியுமே?
• அறம், தர்மம். சித்தாந்தம், உரிமை, உடைமை எல்லாமே நாம் உருவாக்கியவையே. வேறேதும் உயிரினத்திற்கு இந்த சுமை இல்லையே!!
• அறம் வலுப்பெறுவது எதிர் அறம் மூலமாகத்தானா?? (தர்மத்தை ஸ்தாபிக்க அதர்மம் இருந்தால்தானே முடியும்?)
• புகாரினின், அருணாச்சலத்தின், வீரபத்ரபிள்ளையின் அறம் அவர்கள் எதிர்கொண்ட “எதிர் அறம்” மூலமாகவே உருவானதா?
• கெ.கெ,எம் கிருஷ்ன பக்தரானது ஒரு லட்சியவாதத்தின் தோல்வியா அல்லது ஒரு ஆன்மா தன்னைக் கண்டடையும் பிரயாணத்தின் முடிவா?
• லட்சியவாதம் என்பது நிறுவனமயமாக்கவேமுடியாததா?? ஒரு கனவின் நீட்சியாக, விதையாகத் தோன்றும் என்னம் நடைமுறையில் உருப்பெறும்போது அதன் தூய்மையைத் தொலைத்துவிடுமா?
• ஒரு வகையில் ஸ்டாலினின் செய்கைகளும், ருஷ்யப் புரட்சியின் படுகொலைகளூம், சைபீரியப் பனிகளில் உருகியோடிய உதிரமும் அதன் “அறத்தால்” நியாயப்படுத்தப்பட்டவையா?
• டால்ஸ்டாயின் / புகாரினின் அறம் அவர்கள் சிந்தையின் விளைவே. ஆனால் இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணிப்பவை. இதில் எது சரி?
• அறம் என்ற ஒரு உணர்வே ஒரு மிகைப்படுத்தல்தானா? மிகுந்த சுமையாகவும், அயர்ச்சியாகவும் இருக்கிறது. இப்படி யோசிக்கக் காரணம் – வேறெந்த ஒரு உயிரினத்திற்கும் இல்லாதமையால் நாம் மட்டும் சுமந்து திரிகிறோமா?
• அறம் – “அறிதலின் / ஞானத்தின்” முதல் படியா?? அறிதலின் / ஞானம் தேடுதலின் வலி அறத்திலும் உள்ளதா?
• அறம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியா? Is it an outcome of mankind’s eternal search of answers to unravel the mystery of this universe?
உங்கள் தளத்தில் “பி.தொ.நி.கு” குறித்த கடிதங்கள், விவாதங்கள் நிறையப் படித்தாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் அருணாச்சலம் அழுதது ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அது என் குரலா??? தெரியவில்லை….
ஒரு புனைவின் எல்லைகளை மீறி உயிர் வாழும் அருணாச்சலம் நலமாக இருக்க வேண்டுகிறேன்,
சதீஷ் (மும்பை)
அன்புள்ள சதீஷ்
பின் தொடரும் நிழலின் குரல் அதன் பரப்புக்குள்ளேயே இந்த வினாக்களை எழுப்பிக்கொள்கிறது என நினைக்கிறேன். அவை சார்ந்த ஐயங்களை சஞ்சலங்களை உங்களிடம் உருவாக்குவது மட்டுமே அதன் பணி. விடைகள் அவரவர் வாழ்க்கை சார்ந்து அறிதல் சார்ந்து நிகழ்கின்றன.
மனிதவாழ்க்கையை இத்தனை உட்சிக்கல்கள் கொண்டதாக ஆக்குவது எது என்பது மிக முக்கியமான வினா. மனிதமனம்தான். அது பல அடுக்குகளாகப் பிரிந்து தன்னைத்தானே கண்காணித்து தன்னைத்தானே கலைத்துக்கலைத்து அடுக்கிக்கொண்டு நிகழ்கிறது. மானுட மனமே அனைத்தையும் சிக்கலாக்கிக்கொள்கிறது. வாழ்க்கைநியதிகளை, உறவுகளை மட்டுமல்ல. இயற்கையைக்கூட அது படிமங்களாக ஆக்கி சிக்கலாக்குகிறது.
அந்தவினாக்களுக்கான விடைகளை உங்களிடம் நீங்கள் தேடலாம். மீண்டும் ஒருமுறை எப்போதாவது நாவலுக்குள் சென்று பார்க்கலாம்
ஜெ
No comments:
Post a Comment