Sunday, July 20, 2014

ஸ்டாலினியம் அழியாத எச்சரிக்கை

999ல் என்னுடைய பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்து இப்போது பத்துவருடம் ஆகப்போகிறது. மறுபதிப்பு வெளிவரப்போகிறது. அந்நாவலை நான் எழுதுவதற்கான காரணம் அதற்கு எட்டு வருடம் முன்பு சோவியத் ருஷ்யா வீழ்ச்சி அடைந்தபோது நான் வருத்தம் அடைந்தேன் என்பதே. அப்போது நான் தேனிலவில் இருந்தேன். அந்த உற்சாகத்தை பலவாரங்களுக்கு அது சமன்செய்து விட்டதைக் கண்டேன். அதற்கான காரணம் என்ன என்று நான் எனக்குள்ளேயே ஆராய்ந்தேன்.
நான் கண்ட காரணத்தை ஒருநாள் சுந்தர ராமசாமியிடம் கேட்டேன் ”சார், என்னைக்காவது உங்களுக்கு கம்யூனிஸ்டுக் கட்சியிலே தலைமைக்கு வந்திடணும்னு ஆசை இருந்திச்சா?” சுந்தர ராமசாமி ‘கோபம்’ கொண்டார் . ”என்ன கேக்கறீங்க நீங்க? நான் என்னை ஸ்டாலின்னுதானே நெனைச்சிட்டிருந்தேன்? எப்டியாவது கட்சியைக் கைப்பற்றி நாட்டுக்கு அதிபரா ஆகி செய்யவேண்டிய வேலை எவ்ளவு வச்சிருந்தேன்?”
அதேதான். ருஷ்யப்புரட்சி என்ற மாபெரும் புராணம் ஒவ்வொரு சிந்திக்கக்கூடிய மனிதனையும் ஏன் கவர்ந்தது என்றால் அவனுள் அது அபாரமான ஒரு பகற்கனவை உருவாக்குகிறது என்பதனால்தான். அவன் மிக அந்தரங்கமாக தன்னை ஓர் யுகபுருஷன் என்று நினைத்துக்கொண்டிருப்பவன். மொத்த சமூகத்தையும், தேசத்தையும், ஏன் வாய்ப்பு கிடைத்தால் உலகையே தலைகீழாக மாற்றிவிட கனவு காண்பவன். ஆகவேதான் அவனுக்கு லெனினைப் பிடிக்கிறது. சேகுவேராவைப் பிடிக்கிறது. அந்தக் கனவுக்காக அவன் உயிரையும் இழக்கத்துணியும்போதுதான் அவன் புரட்சியாளனாக துப்பாக்கி ஏந்துகிறான்.
மனிதாபிமானத்தால் உந்தபப்ட்ட மனிதர்கள்கூட ஸ்டாலின் இழைத்த மாபெரும் மானுடக்கொடுமைகளை எப்படி ஏற்றுக்கொண்டார்கள், எப்படி அந்த செயல்களை நியாயப்படுத்தினார்கள் என்றால் அவர்கள் மனத்துக்குள் ஸ்டாலின்மீது உள்ளார்ந்த வழிபாட்டுணர்ச்சி இருந்தது என்பதனாலேயே. அவர்கள் ஸ்டாலினாக தங்களை நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்பதனாலேயே.நானும்தான்.
அந்த மனநிலையின் பலநூறு தருணங்களை, அதன் மனஎழுச்சியை, அது அளிக்கும் தார்மீகச் சரிவை பின்தொடரும் நிழலின் குரல் பக்கம் பக்கமாகப் பேசுகிறது. அந்த புள்ளியில் இருந்து ஸ்டாலினின் உளவியலுக்குள் சென்றால் தெரியும் ஏன் ஸ்டாலின் தன் தோழர்களைக் கொன்று குவித்தபடியே இருந்தார் என்று. அவர் ஸ்டாலினாக ஆகும் கனவுகள் கொண்டிருந்தவர்களைத்தான் கொன்றுகொண்டிருந்தார். டிராட்ஸ்கி ,புகாரின் முதல் மாக்ஸிம் கார்க்கி வரை…
பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்தபோது அந்நாவலுக்கான ஆதாரங்கள் கிளாஸ்நோஸ்த்,பெரிஸ்த்ராய்க்கா வழியாக ஏராளமாக வெளியாகியிருந்தன. ஆனாலும் அதில் உள்ள தகவல்கள் ‘நிரூபிக்கப்படவைல்லை’ என்று இங்கே சில அறிவுஜீவிகள் இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துகொண்டே இருக்கும் அதிகாரபூர்வ ஆவணங்களை அவர்கள் அறிவதேயில்லை. ஏன் என்றால்¦ இப்போது சோவியத் ருஷ்யா ஒரு தத்துவப்பிரச்சினை அல்ல. வெறும் கடந்த காலம்!
சோவியத் ருஷ்ய அழிவுகளைக்குறித்த ஆய்வுகளில் எனக்கு அப்போது மனதைக் கவர்ந்திருந்தவர் ஐசக் டொயிட்ஷர். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய ரெஜி சிரிவர்த்தனே.டைசக் டொயிட்ஷரின் அறம் சார்ந்த நடுநிலைத்தன்மை என்நை மிகவும் கவர்ந்தது. பின் தொடரும் நிழலின் குரல் நாவல் 1990ல் வெளிவந்த அவரது  ஸ்டாலின் அரசியல் வரலாறு என்ற நூலை பெரிதும் சார்ந்தது. [Stalin: A Political Biography : Isaac Deutscher ]
இவ்விதன் சொல்வனத்தில் சமீபத்திய ஸ்டாலினிய ஆய்வுநூல்களைச் சார்ந்து திருவாழிமார்பன் என்பவர் ஒரு ஆர்வமூட்டும் கட்டுரையை எழுதியிருக்கிறார். சைமன் சீபாக் மாண்ட்பியோரி  [Simon Sebag Montefiore] எழுதிய ‘இளம் ஸ்டாலின்’ ["Young Stalin" ]என்ற நூல் குறித்த மதிப்புரை அது. ஸ்டாலினின் உளவியல் என்பது அதிகாரத்தின் உளவியலை அறிய மிகமிக முக்கியமான ஒரு ஆதாரக்களம். அவ்வகையில் எழுதப்பட்ட கட்டுரை இது

No comments:

Post a Comment