Sunday, July 20, 2014

ஜெகதீஷ்குமார் கடிதம்

ஜெ,
விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்ததிலிருந்து உங்களுக்கு நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை. ஆனால்தினமும் உங்கள் தளத்தில் மேய்வது மட்டும் நிற்கவில்லை. பொதுவாகவே இணையப் பயன்பாட்டைக் குறைத்துப் புத்தகங்கள் வாசிப்பதை அதிகரித்து விட்டதால் உங்கள் தளத்தில் கூட நிறைய வாசிக்க முடிவதில்லை. ஆனால் உண்மை சுடரும்கட்டுரைகள் முதற்சில வரிகளிலேயே உள்ளிழுத்துக் கொள்கின்றன. வாழைப்பழ தேசம், மதுவிலக்கு பற்றிய கட்டுரைகள் போன்று.
சிறுகதைகளில் காந்தி பற்றிய சிறுகதையை வாசித்தேன். சென்ற மாதங்களில் உங்கள் நாவல்கள் சிலவற்றை வாசித்து முடித்தேன். பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், காடு (கால்வாசி)
பின் தொடரும் நிழலின் குரல் கொடுத்த அனுபவம் அலாதியானது. உங்கள் நாவல்களிலேயே நான் முதலில் வாசிக்க விரும்பியது பின் தொடரும் நிழலின் குரலைத்தான். ஆனால் விஷ்ணு புரம், இரவு, கிளி சொன்ன கதைக்குப் பிறகே இந்நாவலுக்கு வந்தேன். ஆனால் இந்த நாவல் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினேனோ, என்ன அனுபவத்தைத் தர வேண்டும் என்று விரும்பினேனோ அப்படியே அமைந்தது எனக்கு மிகுந்த உவப்பை அளித்தது. என் மனத்துக்கு மிக நெருக்கமான நாவல்களில் ஒன்றாகி விட்டது பின் தொடரும் நிழலின் குரல். அந்த அபத்த நாடகமும், தல்ஸ்தொயும், தஸ்தாவெஸ்கியும் சந்தித்துக் கொள்ளும் இடங்களும் மயக்கம் தருபவை. தேவ குமாரனின் வருகை நாவலின் இறுதியில் முத்தாய்ப்பாக அமைந்தது.
தத்துவார்த்தமான கேள்விகளின் ஊடாக நிகழ்த்தும் பயணம் என்பது விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் இரண்டுக்குமே பொதுவாகத்தான் உள்ளதென்று நினைக்கிறேன்.
ஓரான் பாமுக்கின் கருப்புப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜெ. ஒரு கேள்வி நீண்ட நாட்களாகக் கேட்க நினைத்திருந்தேன். நீங்கள் ஏன் சில ஆண்டுகளாக நாவல் எழுதுவதில்லை? (உங்கள் எல்லா நாவல்களையும் நான் வாசித்து விட வில்லைதான். இருந்தாலும். ஓர் இலக்கியவாதியின் மனத்துக்கு நாவல் படைப்புத்தானே நெருக்கமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கேட்கிறேன்.). அசோகவனம் என்ற நாவல் நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதாகக் கேள்வியுற்றேன். முடித்து விட்டீர்களா? அல்லது வேறு ஏதேனும் நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா?
இலக்கிய ரசனை கொண்டவர்கள் தீவில் வசிப்பவர்களைப் போல. தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொள்ள ஓர் சிறு வட்டமே அவர்களுக்கிருக்கும். நானோ உண்மையாகவே தீவில் வசித்து வருகிறேன். என் இலக்கிய விவாதத்துக்கு ஒரே நபர் நீங்கள் மட்டும்தான்.
நன்றி ஜெ.
ஜெகதீஷ்குமார்
அன்புள்ள ஜெகதீஷ்
பின்தொடரும் நிழலின் குரலுக்கும் விஷ்ணுபுரத்துக்கும் இடையேயான தூரமென்பது நவீன கவிதைகளுக்கும் செவ்வியல்கவிதைகளுக்குமான தூரம். மிகபெரிய இடைவெளி, ஆனால் இரண்டும் ஒன்றே.
பின் தொடரும் நிழலின் குரலில் உள்ள சமகாலத்தன்மையே அதன் பலம். அதன் சிக்கலாக நான் உணர்ந்ததும் அதுவே. அந்த சமகாலத்தைன்மை கனவுநிலையை உருவாக்கத் தடையாக அமைந்தது. விதவிதமான புனைவுகள் வழியாக அதைத் தாண்டவேண்டியிருந்தது
நாவல்கள் எழுதிக்கொண்டுதானே இருக்கிறேன்? சமீபத்தில்தான் இரவு, அனல்காற்று வந்தது. வெள்ளையானை வரப்போகிறது. பெரியநாவல்களுக்கு நடுவே இம்மாதிரி சின்னநாவல்கள் மறைந்துபோகின்றனபோலும்
அசோகவனம் கால்வாசி எழுதவேண்டும். இன்றையசூழலில் எங்காவது போய் மூன்றுமாதம் தலைமறைவாக இருந்து மட்டுமே எழுதமுடியும்போல. இவ்வருடமாவது எழுதவேண்டும்
ஜெ

No comments:

Post a Comment